இயற்கையோடு இயைந்த வாழ்க்கை

மனிதனுடைய வாழ்க்கை தற்காலத்தில் மாறுபாடு அடைந்துள்ளது. இயற்கைக்கு எதிரானதாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இயற்கை சீற்றத்தை உலக சமுதாயம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தொழில் மயமாக்கல் மூலம் பெருமளவில் கரியமிலவாயு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  அதனால் 'உலகம் வெப்பமயமாதல்' என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது! திருக்குறளில் கூறப்பட்டுள்ள 'மிகுபொருள் விரும்பாமை' என்கிற விதி கைவிடப் பட்டு வருவது கண்கூடு. 'மனிதர்களின் தேவைக்கு உண்டான அனைத்து வளங்களும் பூமியில் உள்ளன. ஆனால் அவனது பேராசையை நிறைவு செய்ய பூமியால் இயலாது.' என்றார் தேசப்பிதா. இக் கருத்து இயற்கையோடு இயைந்த வாழ்வின் முக்கியத்துவத்தை விளக்குவதாக உள்ளது. இயந்திர மயமாக்கல் மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யலாம். ஆனால் அதன் எதிர் விளைவாக சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க முடியாது. மிகப் பெரும் பரப்பிலான காடுகள் அழிக்கப்படுவதால் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் அழிகின்றன. வளர்ந்த நாடுகள் அனைத்தும், வளரும் நாடுகளின் இயற்கை வளங்களை அழித்து பல தொழிற்சாலைகளை அமைத்து சுற்றுச்சூழல்  சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இதனைக் குறித்து சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால்  'கண்களை விற்று சித்திரம் வாங்குதல்' எனலாம். ஏனெனில் உலகின் எந்த மூலையில் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்தாலும், அதன் பாதிப்பு அனைத்து நாடுகளுக்குமேயாம்! இதனை உணரும் காலம் வந்துவிட்டது!  பெரும் தொழிற்சாலைகளில் உருவாகும் பொருள்களைத் தவிர்க்கும் பழக்கத்தை மக்கள் மேற்கொண்டால் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்னும் கனவு மெய்ப்படும்!


Comments