பாரம்பரியம் சிறுகதை

சிறுகதை

பாரம்பரியம்

   "வாங்க வாத்தியாரம்மா...வாங்க கண்ணுங்களா..." மூதாட்டி பொக்கை வாய் சிரிப்போடு வரவேற்றார். மர நாற்காலியில் கோமதி டீச்சரை அமரும்படி சொன்ன பாட்டி கோரைப்பாய் விரித்து அதில் மாணவச் செல்வங்களை அமர்ந்து கொள்ளச் சொன்னார்.
               பிறகு பாக்கு மட்டைத் தட்டுகளில் கடலை உருண்டை, எள்ளுருண்டை, வெள்ளரிப் பிஞ்சு, நுங்கு, அதிரசம், முறுக்கு, பலாச்சுளை போன்ற திண்பண்டங்ளை நிரப்பிக் கொடுத்தார். மூதாட்டியின் உபசரிப்பில் ஐவரும் திக்குமுக்காடினர்!
                "பாட்டி... வாசல்ல கோலம் போட்டிருந்தீங்க...நல்லா இருந்தது. வாசல் புழுதி இல்லாமல் சுத்தமா இருந்தது... அது எப்படி?" மாலா வியப்புடன் கேட்டாள்.
                             " பசு மாட்டுச் சாணத்த தண்ணீர் விட்டு கரைச்சு விடிகாலை நேரத்தில தெளிப்பேன்...அப்படி தெளிச்சா வீட்டுக்குள்ள பூச்சி பொட்டு வராது...மண்தரையும் கட்டாந்தரையா மாறிடும் கண்ணு..."
                             "பாட்டி ...உங்க வீட்டில் சமைக்க குக்கர் இல்லையே... எப்படி சோறு வைப்பீங்க?..." இது கலாவின் சந்தேகம்.
                                  "மண் பானையிலதான் கண்ணு...அரிசியையும் தண்ணியையும் கலந்து அடுப்பில வைக்கணும்...அரிசி வெந்து போனதும் கஞ்சியை தனியா வடித்து எடுத்தால் சோறு தயார்..."
                           " காத்தாடி இல்லை, மின் விளக்கு கூட இல்லை...உங்களுக்கு கஷ்டமா இல்லையா?"ரவி கேட்டான்.
                              "பனை ஓலையில கூரை போட்ட குடிசை...அதனால் உள்ளே வெக்கை தெரியாது... மின் விளக்கு போட்டால் பூச்சி வீட்டுக்குள்ளே வருமே.."
                               "இயற்கையோடு இயைந்த வாழ்வுன்னா என்ன அப்படின்னு தெரிஞ்சுகிட்டோம் பாட்டி!... " 
                        " நாமெல்லாம் இங்கே வரோம்னுதான் பாட்டி வேலைக்கு கூட இன்னக்கி போகலை... பாட்டிக்கு எல்லோரும் நன்றி சொல்லுங்க..." கோமதி டீச்சர் பண்பாட்டை சுட்டிக்காட்டினார்.
                      'இந்த வயதில் கூட வேலைக்குப் போக முடியுமா?' என்ற வியப்போடு மாணவச்செல்வங்கள் பாட்டிக்கு நன்றி கூறிவிட்டு  பாட்டியை பிரிய மனமில்லாமல் புறப்பட்டனர்.
                 ' இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்தான்' என்று கூறிய தேசப்பிதாவின் கருத்தை மறந்து விடாமல் நேரம் கிடைக்கும்போது கிராமங்களை நோக்கிச் செல்வோம்!

Comments