கட்டுரை

வாழ்க்கை முறை

 பாரத நாடு விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு. விவசாயத்தை தொழில் என்று குறிப்பிடுவதைக் காட்டிலும் 'வாழ்க்கை முறை' என்று கூறுவது பொருத்தமானதாக இருக்கும்.

 விவசாயம் உடல் உழைப்பு சார்ந்த ஒன்று. விடிகாலையில் எழுந்து கஞ்சி குடித்துவிட்டு வயல்வெளி, தோட்டம், தோப்பு துறவு செல்லும் உழவர்களுக்கு வேலை கடுமையானதாக இருக்கும்.

 காலை பத்து மணியளவில்தான் அவர்களுக்கு வீட்டிலிருந்து பழைய சோறு வடிவில் உணவு வரும். பெண்களும் ஆண்களுக்கு இணையாக கடுமையாக உழைப்பவர்களாக இருப்பார்கள்.

 ஆனால் இன்றைய நிலையே வேறு. உடல் உழைப்பு அருகிவிட்டது. உட்கார்ந்த இடத்தில் உத்தியோகம்! உணவுப் பழக்கமும் மாறிவிட்டது. இதன் காரணமாக நாற்பது வயதை அடைந்தவருக்கே பலவிதமான நோய்கள் வந்துவிடுகின்றன.

 காடு, கழனி பல இடங்களுக்கு அலைந்து திரிந்து பணியாற்றிய நிலை தற்போது பெரும்பாலோனோருக்கு இல்லை. எனவே உண்ட உணவு முறையாக செரிக்காமல் நோய்களின் உறைவிடமாகி விட்டது.

 கடுமையாக உழைத்தவர்கள் பசித்த பின்னரே புசித்தனர். அரிசிச் சோற்றில் இருந்து கஞ்சியை பிரித்து எடுத்து வெவ்வேறு வேளைகளுக்கு உணவாக எடுத்துக் கொண்டனர். இரண்டு வேளை உணவுக்கிடையே உடல் உழைப்பு இருப்பதால் உணவு எளிதாக சீரணம் ஆகிவிடும்.

 ஆனால் இப்போதைய நிலை முரணாக இருக்கிறது. கணினி முன் மணிக் கணக்கில் அமர்ந்து கொண்டு பணி செய்வதால் உடல் உழைப்பு முற்றிலும் இல்லை. மேலும் குக்கர் சமையலில் சோறும் கஞ்சியும் கலந்தே இருக்கும். இரு வேளைகளில் சாப்பிடக் கூடிய உணவை ஒரே வேளையில் ஏற்பதால் உடலில் கொழுப்புச் சத்து மிகுந்து உடல் எடை கூடிவிடுகிறது.

 நடந்து செல்லும் பழக்கம் மாறி, இரு சக்கர வாகனத்தில் செல்வதால் உடல் இயக்கம் என்பதே இல்லை என்றாகிப் போனது. விளைவு, நோய்கள் வரிசை கட்டி வந்துவிடுகின்றன.

பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மிதிவண்டி ஓட்டுவோருக்கு சாலையில் தனியாக பாதை ஒதுக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் மிதிவண்டி ஓட்டுவதை அவமானமாக எண்ணும் நிலை வந்துவிட்டது. வாகனம் இல்லாத வீடே இல்லை. 'குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டர் தூரம் செல்வோர் மிதி வண்டியைப் பயன்படுத்தினால் ஆண்டுக்கு ரூ 1.80 லட்சம் கோடி பணம் மிச்சம் ஆகும்' என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வந்துள்ளது. மேலும் நோய்நொடி இல்லாத இல்லாத மனிதகுலத்தைக் காண இயலுமே!
 சிந்திப்போம்! செயல்படுவோம்!

Comments