சிறுகதை

வாடகை வீடு

 "வீட்டை காலி பண்ணச் சொல்லி இரண்டு வருஷமாச்சு... இன்னும் காலி பண்ணாம இருக்கிற... என்னால உன்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைக்கிறியா?...உன் மனசுல என்னதான் நினைச்சிட்டிருக்க?"
 வீட்டு உரிமையாளர் காலையிலேயே சண்டைக்கு வந்துவிட்டார். பாலுவுக்கு நண்பர்கள் பலர். அவர்களில் தீயவர்கள் சிலரும் இருந்தனர். 'பாலு நீ பல வருஷமா இங்கே குடியிருக்க...அதனால் கணிசமா பணத்த ஹவுஸ் ஓனர்கிட்ட கறந்துட்டு காலிபண்ணு...' என்றனர்.       பாலுவும் அப்படியே செய்வதாக முடிவு செய்தான். அவனுக்கு ஆலோசனை சொன்ன ரவியை தொடர்பு கொண்டு அவனை வீட்டுக்கு வரச்சொன்னான்.  பிறகு வீட்டு உரிமையாளரிடம் நண்பன் வரும் வரை சற்று காத்திருக்கச் சொன்னான்.
 ரவி வந்து வீட்டு சொந்தக்காரரிடம் பேசினான். "அய்யா பாலு வீட்ட காலி பண்ண சம்மதிச்சிட்டான். அவன் இந்த வீட்லயே நாற்பது வருஷ காலமா இருந்துட்டான். அதனால் ஐம்பதாயிரம் கொடுத்துடுங்க...உடனே அவன் காலி பண்ணிடுவான்..."
 வீட்டுக்காரருக்கு வந்ததே கோபம்! "நானும் பொறுமையா ரெண்டு வருஷமா இருக்கேன்...காலி பண்ணாம அழிச்சாட்டியம் பண்ணிகிட்டு இருக்கான்...இப்ப என்னடான்னா பணத்தைக் கொடு காலி பண்ணுவான்னு சொல்றியே... என்னவோ எங்கிட்ட பணத்தை கொடுத்து வெச்சவன் மாதிரி கேட்கிற..என்னை பார்த்தா உங்களுக்கு இளிச்ச வாயனா தெரியிதா  என்ன?"  "அய்யா... இப்ப நடைமுறை அப்படி இருக்கு...பல வருஷமா குடியிருந்தவங்களுக்கு பணத்தைக் கொடுத்துதான் காலி பண்ண வெக்கறாங்க"
"எங்கேயாவது ஏமாந்தவன் இருப்பான்..அவன் கிட்ட போய் உன் கதையச் சொல்லு...மரியாதையா காலி பண்ணிடணும்...முரண்டு பண்ணிணா எப்படி காலி பண்ண வைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்..."
 வார்த்தை தடித்தது. ஆவேசமாகப் பேசிவிட்டு புறப்பட்டுப் போனார் வீட்டின் உரிமையாளர்.
 நாள்கள் சில சென்றன. பாலுவுக்கு ஒருநாள் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவனது நண்பர்கள் அவனை மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். என்றாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
 நம் உடல் கூட ஒரு வாடகை வீடு தானே? வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டால் வீடாகிய இந்த உடலைக் காலி செய்துகொண்டு போகத்தானே வேண்டும்?

Comments